எனன தான் பூபதி பஞ்சர் போடுவதிலும் சைக்கிள் பழுது பார்ப்பதிலும் கில்லாடி என பெயர் வாங்கியிருந்தாலும், பணம் பண்ணுவதற்காக செய்ய வேண்டிய சில தகிடுதத்தங்களை தான் மட்டுமில்லாமல் தன் சிஷ்யனுக்கும் நன்றாகவே சொல்லிக் கொடுத்திருந்ததால் தான் "டேய் பாண்டி, இன்னிக்கு ரோட்டுல செய்ய வேண்டிய காரியத்தை முடிச்சிட்டீயாடா.." என்று கேட்பதற்கு முன்பே "அண்ணேய்...இன்னிக்கு ரோடு முளுக்க கண்ணாடி சில்லு, ஆணி நெறய்ய போட்டிருக்கேன்..பஞ்சர் போட எத்தனை வண்டி வருதுன்னு பாருங்க.." என்று பாண்டி சொல்ல சொல்ல ஒரு வயதானவர் வியர்வையுடன் சைக்கிளை தள்ளிக் கொண்டு கடைக்கு வந்து எட்டிப் பார்த்து, " பஞ்சர் போடணுங்க.." என்று பூபதியை பார்த்து கேட்க, மகிழ்ச்சியடைந்த பூபதி, 'பரவாயில்ல பொடியன்..நல்லாவே வேலை செஞ்சிருக்கான்..உடனே ஒர்க அவுட் ஆயிருச்சி..இந்த வாரம் பையனுக்கு சினிமாவுக்கு போக காசு குடுத்திரலாம்..ரொம்ப நாளாவே கேட்டுட்டு இருக்கான்..' என்று எண்ணியவாறு பாண்டியை பார்க்க அவன் வெற்றிப் புன்னகையுடன் பூபதியை பார்த்து சிரிக்கும் போது, திடீரென 'முன் தினம் பார்த்தேனே' என்று பூபதியின் மொபைல் அலறுவதை கேட்டவன், " டேய் பாண்டி போன்ல யாருன்னு கேளு.." என்று சொல்லிவிட்டு "முன்னால டயருங்களா..? ரொம்ப தேஞ்ச்சிருக்கே? டயரை மாத்திரலாங்களா..? என்று பெரியவரிடம் சென்றவன், "அண்ணேய்..உங்களுக்கு தான் போனு..அக்கா பேசுது.." என்று சொன்ன பாண்டியிடமிருந்து போனை வாங்கி " சொல்லு செல்வி.." என்றவனுக்கு எதிர் முனையில் பேசிய தன் மனைவி "ஏங்க நான் பையனை இஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருந்தேன்..எந்த படு பாவியோ ரோட்டுல ஆணி போட்டு வச்சிருக்கான்..காலுல ஏறி ரத்தம் கொட்டுது..உடனே வாங்க, நான் கறிக்கடை மொக்குல இருந்து பேசுரேன்.." என்று சொன்னதை கேட்டு முகம் பேயறந்ததை போல் ஆகி ஒன்றும் பேசாமல் அவசர அவசரமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடும் போது 'கடவுளே நான் போடச் சொன்ன ஆணியில இப்ப என்னோட சைக்கிளே பஞ்சர் ஆயிறக் கூடாது..எனக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது தான் அடுத்தவங்க வலி தெரியுது..இனிமே இப்படி பண்றதை விட்டுரேன்..' என்று மனதில் வேண்டிக் கொண்டான் பூபதி.(குறிப்பு: முடிவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி)
No comments:
Post a Comment